ஞாயிறு, 5 ஜூலை, 2015

பெயர் ஒன்று வேண்டும்!

ருளம்பலம் அண்ணருக்கு மனதில் ஒரு பெரிய கவலை! ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் அவரது நீண்டநாள் ஆசையொன்று நிறைவேறாமலேயே இருக்கின்றது.

அந்த ஆசை....

‘பெவுக்னிஸ்’ விசாவுடன் ஸ்ரீலங்காவுக்குச் சுற்றுலாப்போய் வரவேண்டும் என்பதல்ல.
சோசல்காசில் இருந்து களவாக வேலைசெய்து வட்டிக்குக் கொடுத்துவரும் குட்டியால் தொந்தியை நிரப்பவேண்டும் என்பதும் அல்ல.

அப்படி என்னதான் ஆசை...?!
ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றிப் பேசும்போது,
"அட அந்த அருளம்பலத்தைப்போல வருமே" என்று பலரும் பேசிக்கொள்ள வேண்டும் என விரும்பினார்.

பகலும் இரவும் இந்த ஆசை அவரை அலைக்கழித்தது. அதனால் அருளம்பலம் அண்ணரின் பப்பளம் போன்ற வதனம்கூடக் கருகிப்போன கடலை வடையாட்டம் இருண்டு கிடந்தது.

அதைக் காண அண்ணரின் தர்மபத்தினியான அருந்ததி அண்ணிக்குக்கூடச் சகிக்கவில்லை.

‘வேலைத்தலத்தில் ஏதாவது கஸ்டமான வேலைதான் அண்ணரின் வாட்டத்துக்குக் காரணமோ?’

‘மார்க்’ இப்ப இலங்கையில் முப்பத்துநாலு ரூபாய் என்றால் எந்த வேலையும் அண்ணருக்குத் தூசிமாதிரி என்பது அருந்ததி அண்ணியாருக்கு நன்கு தெரிந்த விடயம்.

நேரிடையாகவே கேட்டுவிட்டார்.
"என்னப்பா! எப்ப பார்த்தாலும் எதையோ பறிகுடுத்தமாதிரி முகட்டை முகட்டைப் பாத்துக் கொண்டிருக்கிறியள்?"

"முகட்டிலை பிலாக்காய் தொங்குது.... வாய்க்கை வந்து விழுமெண்டு பாத்துக் கொண்டிருக்கிறன்."
எரிச்சலுடன் கீழேவிழுந்த தகர ‘டப்பா’வைப்போல் கணகணத்தவரை விசித்திரமாகப் பார்த்தார் அண்ணியார்.

"வெளியிலைபோய் பனிகினி பிடிச்சிட்டுது போலை! அப்பவும் சொன்னனான் வெளியிலை போகேக்கை தொப்பியைப் போட்டுக்கொண்டு போங்கோ எண்டு" என்று அருந்ததி அண்ணியார் கூறியதுதான் தாமதம், ‘செற்றி’யில் இருந்து முன்னே தொங்கிச் சரிந்துபோன வண்டியுடன் எகிறிக் குதித்தார் அருளம்பலம் அண்ணர்.

"ஓ.... அருந்ததி! மை லீப்லிங்.... கண்டுபிடிச்சேன்.... கண்டுபிடிச்சேன்..." என்று கத்தியவரைக் கண்டு பதைபதைத்தார் அருந்ததி அண்ணியார்.

"என்னப்பா செய்யுது உங்களுக்கு? ஐயோ கடவுளே...! வேப்பங்குத்திமாதிரி நல்லாயிருந்த மனுசனை இப்பிடி ஏன் நாசமாக்கிப்போட்டாய்?" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார் அண்ணியார்.

"எடியாத்தை.... நிப்பாட்டு உன்ரை கத்தலை.... என்ரை கனகாலத்தை ஆசை நீ சொன்ன தொப்பியாலை நிறைவேறப் போகுது...."

"கனகால ஆசையோ...?! அதென்னப்பா அப்பிடியொரு ஆசை இந்த வயசிலை?! வாற சம்பாத்தியம் காணாதெண்டு தொப்பியோடைபோய் ‘வானோவ்’வுக்கு முன்னாலை நிண்டு பிச்சை கேக்கப்போறியளே?!"

"அடி செருப்பாலை.... இந்த அருளம்பலத்தைப்பற்றி நாலுபேர் கதைக்க வேணும்..."

"அது பெரிய வேலையே...? நான் சொல்லுவன்.... உங்கடை அருமை மேள் அம்பிகா சொல்லுவள்.... உங்களைக் கண்டால் சோசல்காரன், அவுஸ்லாண்டர் பொலிஸ் எண்டு அஞ்சாறு பேராலும் சொல்லீனம்தானே!!"

"இந்த வயசிலை உனக்கொரு நக்கல்.... இந்த ஜேர்மனியிலை ஆராலும் ஒருத்தன், ‘அருளம்பலத்தைத் தெரியுமே’ எண்டு விசாரிக்கேக்கை, ‘எட அந்தாளைத் தெரியாதெண்டால் வேறை ஆரைத் தெரியும்?’ எண்டு சனங்கள் சொல்லவேணும்..."

"நான் உங்கடை துள்ளலைக் கண்டு ஏதோ பைத்தியம் கியித்தியம் பிடிச்சுப்போச்சோ எண்டெல்லே பயந்து போனன்.."

"ஹி... ஹி.... அன்புதான்... என்ன அருந்ததி...!!"

"பைத்தியக்காரன்ரை மேளை ஆர் கலியாணங்கட்ட வருவினம்.... சொல்லுங்கோ பாப்பம்?!"
அசடு வழிய நின்றார் அருளம்பலம் அண்ணர்.

"தொப்பியை வைச்சு என்ன செய்யப்போறியள்?!"

"எல்லாரும் சமயம் மாறீனம்... நானும் மாறப்போறன்.”

"ப்பூ.... பத்தோடை பதினொன்டெண்டு கதைப்பினம்…."

"நான் முஸ்லீமாக மாறப்போறன். எங்கடை ஆக்கள் எவனும் செய்யாத புதுமை. இதைப்பற்றி எல்லாரும் கதைப்பாங்கள்..”

"கதைப்பினமோ இல்லையோ. நிச்சயமாக் காறித் துப்புவினம். கட்டையிலை போற வயசிலை கண்டறியாத ஆசை ஒண்டு. நீங்கள் ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு என்னத்துக்கு வாறியள் எண்டு விளங்குது...!"

"என்னடியாத்தை?!"

"முஸ்லீமானால் ரண்டு மூண்டைப் பெஞ்சாதியாய் வைச்சிருக்கலாம் எண்ட ஐடியாதானே ஐயாவுக்கு?!  ரீவியிலை சுவுடு  பாக்கேக்கையே நினைச்சனான், இப்பிடி என்னவாலும் கந்தல்கள் வருமெண்டு.”

"எடியே கண்கெடுவாளே! சத்தியமா அப்பிடி எல்லாம் இல்லை…"

"உங்களை நம்பேலாது.... செய்தாலும் செய்வியள்.... நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்கமாட்டன்..."
மறுபடியும் சோர்ந்துபோனவராய் ‘செற்றி’யில் அமர்ந்து முகட்டைப் பார்த்தார் அருளம்பலம் அண்ணர்.

‘இனிமேல் தொப்பியைப்பற்றிக் கதைப்பதில்லை!’ என்று மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டார் அருந்ததி அண்ணியார்.
+++++++

ருளம்பலம் அண்ணர் கையில் ஒருகட்டுக் கடிதங்களுடன் பதினாறு வயது வாலிபனாகத் துள்ளிக் குதித்தபடி வந்தார்.

"அருந்ததி! பிள்ளை அம்பிகா!! எல்லாரும் வாங்க இங்கை.... கைமேல் பலன்.... ‘பரிஸ்’ஸிலை இருந்து வாற தமிழ்ப்பேப்பரிலை போட்ட விளம்பரத்துக்கு கைமேலை பலன் கிடைச்சாச்சு..."

"என்ன... ‘பலருக்குத் தெரிந்த மனிதராக வாழ வழி முறை கூறுவோருக்கு ஆயிரம் மார்க் பரிசு’ எண்ட விளம்பரம்தானே...? ஆராலும் வேலைவெட்டி இல்லாததுகள் எழுதியிருக்கும்!" என்ற அருந்ததி அண்ணியாரைச் சுட்டெரிப்பதுபோலப் பார்த்தார் அண்ணர்.

"எதுக்கும் அபசகுனமாய் ஒவ்வொண்ட சொல்லிப்போடுவாய். பிள்ளை அம்பிகா.... நீ இப்ப ஒவ்வொண்டாய் உடைச்சு வாசி!"
அம்பிகா ஒவ்வொரு தபாலாக வாசிக்க ஆரம்பித்தாள்...

"அன்புள்ள அருளம்பலம் ஐயா! தங்கள் சுகம் எப்படி?..."
"மடையன்! மடையன்!! ‘ஐடியா’ சொல்லெண்டு கேட்டால் சுகம் விசாரிக்கிறான்... எனக்கென்ன குறைச்சல்?! ஊரிலை சாப்பிட்ட ஒடியலும் குரக்கனும் இன்னும் வயித்துக்கை இருக்கு!"
"அப்பா! குரக்கன் இப்ப முளைக்குதுபோலை...!"
“என்ன?!"
"உங்கடை வயிறு வரவரப் பெருக்குது!"
"உதைவிட்டுப்போட்டு முக்கிய ‘ஐடியா’க்களைமட்டும் படி மேனை!"

"நான் குடி சூது எண்டு கண்டபடி சுத்திறனான்.... அதனால் என்னால் திருமணம் செய்ய முடியவில்லை. உங்கள் மகளை எனக்குக் கலியாணம் கட்டிவைத்து, என் வாழ்க்கைக்கு உதவினால், உங்களைப்பற்றி நல்லவிதமாய்க் கதைப்பார்கள்.”
"அடி செருப்பாலை.... துப்புக்கெட்டவன்ரை தப்புத் தப்பான ‘ஐடியா’.... அடுத்த கடிதத்தைப் பார் பிள்ளை...."

"எனக்குக் கொஞ்சக் காசு தேவைப்படுகிறது. பத்தாயிரம் மார்க் தந்தால் உங்கள் பெயர் வெளியே தெரியும் மார்க்கத்தைக் காட்டுவேன்!"
"ஒரு கல்லிலை ரண்டு மாங்காய் அடிக்கப் பாக்கிறான்... போக்கிரிக் கழுதை. காசை ஏமாத்திப்போட்டு என்னை ‘ஏமாந்த சோணகிரி’ எண்டு நாலுபேர் நக்கலடிக்க ‘ஐடியா’ சொல்லுறான்...!"

அடுத்த கடிதத்தை எடுத்தாள் அம்பிகா.
"நீங்கள் ஜேர்மன் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கலாம்...!"
"நாசமாய்ப்போச்சு...! தனித்தமிழ் ஜேர்மனி கேட்டுப் போராடலாம் எண்டு எழுதாமல் விட்டான்...!"
தலையில் அடித்துக்கொண்டார் அருந்ததி அண்ணியார்.

கடிதங்கள் எவையுமே உருப்படியாக இல்லாத கவலையில் முகட்டைப் பார்க்கலானார் அருளம்பலம் அண்ணர்.
++++++++

ருளம்பலம் அண்ணர் ‘செற்றி’ ஒன்றில் உட்கார்ந்தவாறு ‘றெஸ்லிங்’ (wrestling)  பார்த்துக் கொண்டிருக்கிறார்.

"அப்பிடிப் போடு. பூட்டெண்டால் உதுதான் பூட்டு. எங்கை கழட்டட்டும் பாப்பம்.... எணேய் அருந்ததி! இஞ்சை ஓடி வாணை...!"

"உங்களுக்கு வேறை வேலை இல்லை. அவங்கள் ஆரோ அடிபடுறாங்கள் எண்டால் உங்களுக்குக் கொள்ளை புளுகம். இங்கை அடுப்படீக்கை நான் ஒருத்தியாய்க் கிடந்து காயுறன்!"

"ஐயோ கெதியா இஞ்சை வாணை.... அண்டரேக்கர் என்னமாய்ப் பூட்டுப்  போட்டிருக்கிறான் பாரன்.... அசைக்கேலாது!”

"இப்ப அண்டரேக்கர்தான் கேக்குதோ...? நேரகாலத்தோடை அம்பிகா ரேக்கரைப் (taker) பாக்கக் காணேலை...!"

"உனக்குக் காலநேரமில்லாமை உந்தக் கதைதான்...! அம்பிகா ஆர்...?! இந்த அருளம்பலத்தின்ரை ஒரேமேள்.... அவளை எடுக்க ஒருத்தன் வாறதெண்டால் ஒரு தகுதி தராதரம் பாக்க வேண்டாமே...?!"

"அவள் ஜேர்மனியிலை எல்லே படிச்சவள்.... அதுக்கேத்த மாதிரிப் பாக்காமைத் தராதரம் அது இதெண்டு அவளை இப்பிடியே வைச்சிருக்கப்போறியளே…?"

"அதைப் பேந்து பாக்கலாம்... இப்ப அண்டரேக்கற்ரை பூட்டை வந்து பாரன். இன்னும் அசைக்க முடியேல்லை!"

"ஊரிலை எண்டாலும் ஆரையாலும் கொண்டு துறப்பீக்கலாம். இஞ்சை ஆரைப் பிடிக்கிறது...?"
+++++++

''அருந்ததி!"

"என்னப்பா! எப்ப பாத்தாலும் அருந்ததி அருந்ததி எண்டு உயிரை வாங்குறியள்..."

"மனுசன் எவ்வளவு களைப்போடை வாறானெண்டு கவலைப்படாமை ஏனப்பா எரிஞ்சுவிழுறாய்...?! அந்தக் காலத்திலை எண்டால் அடிச்சுப் புரண்டுகொண்டு வருவாய்..."

"நீங்கள்மட்டும் என்னவாம்.... தென்னங்கண்டுகளுக்குத் தண்ணி இறைக்கிறன் எண்டு துலாவிலை நிண்டு என்னைத்தானை பாத்தனீங்கள்..."

"எல்லாத்துக்கும் ஒண்டு வைச்சிருக்கிறாய். நான் போன விசயத்தைக் கேளன். பொடியன்ரை தாய் தேப்பனோடை எல்லாம் பேசி நாள் வைச்சாச்சு. கலியாணத்துக்கு இன்னும் ஒரு மாதம்தான் கிடக்கு."

"கலியாணச் செலவெல்லாம் ஆரப்பா...?"

"ஆரோ...? நாங்கள்தான்!"

"ஏனப்பா ஓமெண்டு சொன்னனீங்கள்?”

"நல்ல கதையிது. அம்பிகா ஆர்...? இந்த அருளம்பலத்தின்ரை ஒரே மேள்... இந்த அருளம்பலத்தின்ரை வீட்டுக் கலியாணம் எண்டால் எப்பிடி இருக்கும் எண்டு செய்து காட்டப்போறன். அதைப் பாத்துப்போட்டு  மற்றாக்களின்ரை கலியாணவீடுகளிலை, ‘இதென்ன கலியாணம். அருளம்பலம் வீட்டுக் கலியாணம்போலை வருமே?’ எண்டு ஒவ்வொருத்தனும் கதைக்கவேணும்..."

"மேளின்ரை கலியாணத்தை நடத்திப் பேரெடுக்கலாம் எண்டு பாக்கிறியள். பெரிய எடுப்பெல்லாம் எடுக்காதீங்கோ. எதுக்கும் விரலுக்கு ஏத்த வீக்கம் வேணும்..."

"எல்லாத்துக்கும் அபசகுனம்மாதிரி ஒவ்வொண்டு சொல்லிப்போடுவாய். கலியாணக் ‘காட்’ பெரிய ‘சைஸ்’ஸிலை அடிக்கவேணும். ஒருபக்கத்திலை மாப்பிளையின்ரை கலர்ப் படம். மற்றப் பக்கத்திலை அம்பிகான்ரை படம். கடைசிப் பக்கத்திலை சம்பந்தியின்ரை படமும் எங்கடையும். ரண்டு செற் மேளம். ரண்டு வீடியோ. எதிரெதிராய் ரண்டு மணவறை. மூண்டு வேளைச் சாப்பாடு. பதினைஞ்சுவகைப் பலகாரங்கள்."

"நீங்கள் எனக்குத்தான் வேலை காட்டுறியள்!" என்று சலித்தவாறு கூறினார் அருந்ததி அண்ணியார்.

"எல்லாம் ‘ஓடர்’ பண்ணினால் வந்து குவியும்.... பொம்பிளையும் மாப்பிளையும் மண்டபத்துக்குப் போற வழியெல்லாம் பூமாரி பொழிய வேணும்..."

"றோட்டிலை குப்பைபோட்டால் குற்றமெல்லே..."

"தண்டனையைக் காசாய்க் கட்டலாம். காசு எவ்வளவு போனாலும் பறுவாயில்லை. இது அருளம்பலத்தின்ரை கலியாண வீடு. இப்பிடி ஆராலையும் நடத்தேலாதெண்டு எல்லாரும் கதைக்க வேணும்...!"
++++++

லையில் துண்டுடன் கல்யாண மண்டபப் படிக்கட்டில் தலைகுனிந்து அமர்ந்திருந்தார் அருளம்பலம் அண்ணர்.

"எல்லாரும் என்னைப்பற்றிக் கதைக்கவேணும் எண்டு ஆசைப்பட்டனே.... கதைக்க வைச்சுப்போட்டாளே என்ரை மேள். பொம்பிளையைப் படம் எடுக்கவேணும் எண்டு உள்ளை போனான் வீடியோத்தம்பி. ‘என் அழகை அணுவணுவாக இரசித்துப் படம் எடுத்தவர்தான் எனக்கேத்தவர்’ எண்டு எழுதி வைச்சுப்போட்டு வீடியோத் தம்பியுடன் கம்பி நீட்டிவிட்டாளே என்ரை மேள்..."

கலியாண மண்டபத்தில் ஏற்பட்ட குசுகுசுப்புக்கள் நாளை ஜேர்மனியிலுள்ள ஒவ்வொரு தமிழ்வீட்டிலும் பேசப்படலாம். 

அந்தவகையில் அருளம்பலம் அண்ணரின் பெயரும் பிரபலமாகிவிட்டதுதானே?! 

(பிரசுரம்: பூவரசு)

3 கருத்துகள்:

மிகவும் நன்றி!